
கோவையில் போலீஸ்காரரின் விரலை கடித்த தொழிலாளி
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நெல்லுகுத்தி பாறையை சேர்ந்தவர் பிரபு. இவர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதையொட்டி பிரபு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித் ெதாழிலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீஸ்காரர் பிரபு சண்டையை தடுக்க சென்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர் அவர் போலீஸ்காரர் பிரபுவின் ஆள்காட்டி விரலை கடித்தார்.
காயம் அடைந்த போலீஸ்காரரை மற்ற போலீசார் மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீஸ்காரர் பிரபு அளித்த புகாரின் பேரில் போலீசார் அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
