`3 மாதங்களில் 30 பைக்குகள், 2 கார்கள்; சொகுசு வாழ்க்கை!’ – திருச்சி போலீஸை அதிரவைத்த பைக் திருடன்
இரண்டாவது மனைவியுடன் சொகுசாக வாழ்வதற்கு பைக்குக்களை திருடினேன் என பைக் திருடன் அகஸ்டின் போலீஸாரிடம் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
திருச்சி திருவெறும்பூர், பெல் மற்றும் துவாக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி காணாமல்போவது வாடிக்கையாக இருந்தது. தொடர்ந்து வாகனங்கள் தொலைந்த வழக்குகள் கூடிக் கொண்டேபோக போலீஸார் வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதுதொடர்பாக விசாரிக்க திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாகத் தனிப்படை போலீஸார் திருவெறும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். வாகனத் தணிக்கையிலும் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர்.
அந்தவகையில் நேற்று இரவு திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில் பகுதியில் தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைப் பிடித்து, விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். அந்த நபரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தஞ்சாவூர் மாவட்டம் வீரசிங்கம்பேட்டை அடுத்துள்ள நடுக்காவேரி கிராமத்தைச் சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் அகஸ்டின் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸாரிடம் அவர்,“திருச்சி திருவெறும்பூர், பெல் தொழிற்சாலை, துவாக்குடி, லால்குடி மற்றும் திருச்சி ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளிலும், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் கரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்ததாகவும், அந்த வாகனங்களைப் பழைய இரும்புக் கடைகளில் விற்று வந்தேன். அதில் கிடைக்கும் பணத்தைத் தனது இரண்டாவது மனைவியிடம் கொடுத்து அவருடன் சந்தோசமாக வாழ்ந்தேன்” என்று போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று மாதங்களில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 30 இரு சக்கர வாகனங்களையும், இரண்டு கார்களையும் திருடினேன்”என்றாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அகஸ்டின் மீதான வழக்குகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2009ஆம் ஆண்டு முதன்முதலில் அகஸ்டின், தஞ்சாவூர் கிழக்கு பகுதிகளில் 10 இரு சக்கர வாகனங்களைத் திருடியதும், தொடர்ந்து மன்னார்குடி, மயிலாடுதுறை, கரூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களைத் திருடி திருடிய வழக்கில் சிக்கி சிறை சென்றதும் தெரியவந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக, அவரது மருமகன் ராஜா என்பவர் அவருக்கு உதவியாக இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து, அகஸ்டின் திருடிய 30 இரு சக்கர வாகனங்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கார், பெல் நிறுவனத்தில் உள்ள உயரதிகாரி ஒருவரின் கார் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீஸார் திருவெறும்பூர் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த இருசக்கர வாகனத் திருட்டுகள் குறித்த சி.சி.டி.வி காமரா பதிவுகளின் அடிப்படையில் வாகனத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது அகஸ்டின்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
,🧐போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
