
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த வாலிபர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது வீட்டில் தனியாக இருந்தார்.
இதைப்பார்த்த சங்கரன்கோவில் கக்கன் நகரை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 21) என்பவர் அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் அதே மாதத்தில் 2-வது முறையாக அந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து பெண்ணின் பெற்றோர் அவர்களது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி உள்ளனர். அதற்கு மகேஷ்குமாரின் பெற்றோர், கர்ப்பத்தை கலைத்துவிட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளனர். அதனை நம்பிய அந்த பெண், தனது பெற்றோரிடம் ஆலோசித்து கர்ப்பத்தை கலைத்து விட்டார்.
ஆனால் அதன் பின்னர் மகேஷ்குமார் குடும்பத்தினர், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கினார். அதனை தட்டிக்கேட்டபோது மகேஷ்குமார், அவரது பெற்றோர் மாரிமுத்து-ராமலெட்சுமி, உறவினர் மாரியம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்து அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளம்பெண் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து மகேஷ்குமார், அவரது பெற்றோர், அவரது உறவினர் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகேஷ்குமார், அவரது தந்தை மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
