ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றம்
மதுரை மாநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிலையங்கள் கோவில் பகுதிகளில் சாலையை மறித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதுரை பாத்திமா கல்லூரி முதல் பறவை காய்கறி மார்க்கெட் வரை சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.
விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது வழக்கு விசாரித்த நீதிமன்றம் போக்குவரத்து போலீசார் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாத்திமா கல்லூரி முதல் பறவை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டது. இதன்படி கடந்த ஒரு வார காலமாக ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி., எந்திரம் மூலம் அகற்றப்பட்டது இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பாக உள்ள கூடாரங்கள் அகற்றப்பட்டன மேலும் மீண்டும் இந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டது இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது