
போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு.. எஸ்சி, எஸ்டி ஆணைய உத்தரவிற்கு ஹைகோர்ட் தடை
திருவண்ணாமலை மாவட்ட கீழ்கொடுங்கலூர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்ற மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உத்தரவிற்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள உளுந்தை கிராமத்தில் வாகனங்களில் பேட்டரி மற்றும் வீடுகளில் நகை ஆகிய திருட்டு புகார்களில் பதிவான வழக்குகளில் சுரேன், சந்தீப், அரவிந்த் ஆகியோர் கீழ்கொடுங்கலூர் காவல் நிலையத்தினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கடுமையாக தாக்கப்பட்டதாகவும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறி மாநில பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையத்தில் மூவரும் புகார் அளித்தனர்.
கீழ்கொடுங்கலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் கோவிந்தராஜுலு, எஸ்.பி.சி.ஐ.டி. தலைமை காவலர் எத்திராஜ் ஆகியோருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த ஆணையம், புகார்தாரர்கள் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டுமெனவும் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யவும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அவர்களின் மனுக்களில் திருட்டு வழக்குகளில் சிக்கிய மூவரும் பெற்றோர் மற்றும் உறவினர்களை பார்த்ததும் அப்பாவிகள் போல் நடித்ததாகவும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினர் மூவர் தரப்பிலும் வழக்கறிஞர் ஆர்.தாமரைசெல்வன் ஆஜராகி வாதிட்டார். அதன்பின்னர் நீதிபதி, ஆணையத்தின் உத்தரவிற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து, புகார்தார்கள் மற்றும் ஆணையம் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
