
தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி கல்லூரி மாணவர் பலி
தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் இல்லம் தெருவை சேர்ந்த ராமர். இவரது மகன் முத்துமாரி (வயது 19). அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் முத்து கணேஷ்(19).
இவர்கள் 2 பேரும் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம்போல் ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டி ருந்தனர். மோட்டார் சைக்கிளை முத்துமாரி ஓட்டிச்சென்றார்.
தென்காசி-குத்துக்கல் வலசை அருகே இலஞ்சி சாலையில் அய்யாபுரம் நோக்கி சென்றனர். அப்போது புளியரையை சேர்ந்த இசக்கி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, மாணவர்கள் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் முத்துமாரி மற்றும் பின்னால் அமர்ந்திருந்த முத்து கணேஷ் ஆகிய 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு மாணவர் முத்து கணேஷ் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி சென்று திரும்பிய மாணவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அய்யாபுரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
