
பாலக்கோட்டில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் விழிப்புணர்வு பேரணியை கல்வி அதிகாரிகள் துவக்கி வைத்தனர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அக்ரகாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி வாகனத்தை வட்டார கல்வி அலுவலர்கள் அன்புவளவன், தங்கவேல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.எல்.ஆர்.ரவி, வார்டு கவுன்சிலர் விமலன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பள்ளியின் வளாகத்தில் துவங்கிய பேரணி தக்காளிமண்டி, கடைத்தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதி வழியாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்து ஏப்ரல் 17 முதல் ஜூலை 31 வரை அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தொழிற்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, வாசிப்பு திறன் வளர்த்தல், இலக்கிய, ஆடல்பாடல், விளையாட்டு, ஆங்கில வழிக்கல்வி . உள்ளிட்ட மாணவர்களின் அனைத்து திறன்களையும் வளர்க்கும் விதமாக அரசு பள்ளி செயல்படுவதாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் பாலசண்முகம், அருளானந்தம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
