
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கி மேலாளர்களுக்கான நிலைக்குழு கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கி மேலாளர்களுக்கான நிலைக்குழு கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட தொழில் மையம், தென்காசி அலுவலகம் சார்பாக 2022-23 -ம் ஆண்டிற்கான புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நீட்ஸ் மற்றும் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட அதிகமாக எய்திட ஒத்துழைத்த அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொழில் வணிகத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் யூ.ஒய்.இ.ஜி.பி, பி.எம்.இ.ஜி.பி, நீட்ஸ் மற்றும் பி.எம்.எப்.எம்.இ. போன்ற அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய வங்கி மேலாளர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.
அதன்படி தென்காசி மாவட்டத்தின் அனைத்து திட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்ட முதல் 3 வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகளின் மண்டல மேலாளர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. மேலும் தென்காசி மாவட்டத்தில் கிளை வாரியாக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய வங்கி கிளை மேலாளர்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் இந்தாண்டு (2023-24) ரூ. 5,912 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஒவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கியுடன் இணைந்து 2023-24-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வடிவமைத்துள்ளது. இந்த திட்ட அறிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு துறைகளில் கடன் வழங்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ. 4,550 கோடியும், தொழில்துறைக்கு ரூ. 600 கோடியும், ஏற்றுமதித்துறைக்கு ரூ. 17 கோடியும், கல்விகடன் வழங்கிட ரூ. 90 கோடியும், வீட்டுக்கடன்கள் வழங்க ரூ. 265 கோடியும், இதர துறைகளுக்கு ரூ. 390 கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ரவி பெற்றுக் கொண்டார்.
அப்போது நடப்பு ஆண்டிலும் மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்பட உள்ள வங்கி திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்த ஒத்துழைப்பு வழங்கும்படி அனைத்து வங்கி மேலாளர்களையும் கலெக்டர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணுவர்தன், வங்கி முதன்மை மேலாளர் கிருஷ்ணன், மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கல் ஆந்தோனி பெர்னாண்டோ, நபார்டு வங்கி பொதுமேலாளர் சசிகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
