
பெங்களூரில் பதுங்கிய கோவை ரவுடிகள் 4 பேரை துரத்தி பிடித்த போலீஸ்சார்
கோவை நகரில் ரவுடி கும்பலுக்குள் நடந்த மோதலில் சத்திய பாண்டி என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காமராஜர்புரம் கவுதம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ரவுடிகள் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.
போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்து ரவுடி கும்பல் வெளிமாநிலங்களுக்கு சென்று பதுங்கி உள்ளது. இதனையடுத்து அவர்களை பிடிப்பதற்கு கோவையிலிருந்து போலீஸ் உதவி கமிஷனர் கணேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பெங்களூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அப்போது கோவையை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கில் தொடர்புடைய சுஜிமோகன் என்பவர் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அப்போது அவர் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டே ஓடினார். அந்த வீடியோவில் எனது கை, கால்கள் நன்றாக உள்ளது. ஆனால் போலீசார் இன்று என்னை பிடித்து விடுவார்கள் என வீடியோ பதிவிட்டார்.
தொடர்ந்து போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்தனர்.
இதையடுத்து மற்ற 3 பேரும் அங்கு இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது அவர்களும் ஓட முயற்சி செய்தனர்.
இதனையடுத்து போலீசார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்கள் 3 பேரும் கோவை ரவுடிகள் கும்பலை சேர்ந்த புள்ளி பிரவீன், பிரசாந்த் மற்றும் அமர்நாத் என தெரியவந்தது.
இதனை அடுத்து கைதான 4 பேரையும் போலீசார் பெங்களூரில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அவர்களை கோவை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்
