மதுரை விரிவாக்கப் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியான 20-வது வார்டு விளாங்குடியில் சொக்கநாதபுரம் 1, 2-வது தெருக்களில் பாதாள சாக்கடை, முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது.
இதுபோன்று பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது. இதுதொடர்பாக 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதிசித்தன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் தண்ணீர் விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரியும், தெருக்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலை அமைத்துத்தர வலியுறுத்தியும் இன்று காலை கவுன்சிலர் நாக ஜோதிசித்தன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் பிரச்சினை, புதியசாலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது