கடையில் லேப்-டாப்பை திருடி பையில் திணித்த இளம் பெண்
கோவை காந்திபுரம் பகுதியில் ஏராளமான துணிக்கடைகள், நகைக்கடைகள், லேப்டாப் மற்றும் செல்போன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் இங்கு லேப்டாப் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கடைக்கு வாலிபர் மற்றும் ஒரு இளம்பெண் வந்தனர். அங்கு பணியில் இருந்த விற்பனையாளரிடம் கம்ப்யூட்டருக்கு மவுஸ் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த விற்பனையாளர் இளம் பெண்ணுடன் வந்த வாலிபருக்கு மவுஸ் காண்பித்துக் கொண்டிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட அந்த இளம்பெண் கடையில் டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருடி அவர் கொண்டு வந்த பையில் வைத்துக் கொண்டார். இதையடுத்து வாலிபரிடம் மவுஸ் காண்பித்துவிட்டு வந்த அந்த விற்பனையாளர் டிஸ்பிளேவில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த லேப்டாப் மாயமானதால் அந்த இளம்பெண் மீது விற்பனையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து இளம்பெண்ணிடம் அவர் கேட்டுள்ளார். முதலில் அந்த பெண் தான் எடுக்கவில்லை என மறுத்தார். அவரது பேச்சில் சந்தேகமடைந்த விற்பனை யாளர் பெண்ணிடம் இருந்த பையை திறந்து காண்பிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை திறந்து பார்த்த போது அதில் லேப்டாப் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் பையில் இருந்த லேப்டாப்பை எடுத்து விற்பனையாளரிடம் திரும்ப கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் எதுவும் வாங்காமல் கடையை விட்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.