
சென்னை வளசரவாக்கம் சினிமா இயக்குனர்-தோழிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
வளசரவாக்கத்தை சேர்ந்தவர் ராம்குமார். சினிமா பட இயக்குனரான இவர் நடிப்பு பயிற்சி பள்ளி ஒன்றும் நடத்தி வருகிறார்.
இவருக்கும் கணவரை இழந்து மகளுடன் வசித்து வரும் மைதிலி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி பொன்மலைபட்டி பகுதியை சேர்ந்த ஜெயராம் பாண்டியன் என்பவர் மைதிலி மற்றும் ராம்குமார் ஆகிய இருவரையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் ‘வாட்ஸ் ஆப்’ மூலமும் மிரட்டல் விடுத்து வந்தார்.
இதுகுறித்து ராம்குமார் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மைதிலியின் கணவர் சாலை விபத்து ஒன்றில் சிக்கி இறந்து விட்டதால் அவர் ராம்குமாருடன் சேர்ந்து வாழ்ந்து வருவதும், இதுபற்றி அறிந்த மைதிலியின் குடும்ப நண்பரான ஜெயராம் பாண்டியன் மைதிலிக்கும், ராம்குமாருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயராம் பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
