Police Department News

திட்டக்குடியில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகரூ. 10 லட்சம் மோசடி செய்த நபர் கைது

திட்டக்குடியில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகரூ. 10 லட்சம் மோசடி செய்த நபர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜய ராஜ் (வயது 30) என்ஜினீயரிங் பட்டதாரி. கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் கடலூர் மேற்கு மாவட்ட தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிவேல் ஆகியோர் விஜயராஜை அணுகி ரூ. 10 லட்சம் கொடுத்தால் மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக பேசி உள்ளனர்.

இதை நம்பி விஜயராஜ் அவர்களிடம் முன்பணமாக ரூ.50 ஆயிரம் பணம் கொடுத் துள்ளார். தொடர்ந்து சிதம்பரம் வாசபுத்தூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் தீபக்கை(38) அறிமுகம் செய்து வைத்தனர். அவர் மூலம் 4 பேரும் டெல்லிக்கு சென்றனர். அங்கு மத்திய மந்திரி உதவியாளர் என ஒருவரை விஜயராஜூக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவர் வேலையை பற்றி கூறி விஜயராஜியின் தந்தை ராஜேந்திரனிடம் செல்போனில் பேசினார். அப்போது மீதம் உள்ள 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் வேலை உறுதி என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி அவர் கூறிய வங்கி கணக்கில் 9 லட்சத்து 50 ஆயிரத்தை விஜயராஜ் செலுத்தினார். அதன் பின்னர் சில மாதங்களாக விஜயராஜ் அலைக்கழிக்கப்பட்டார் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த விஜயராஜ் பணம் கொடுத்தவரிடம் எனது பணத்தை திரும்பி கொடுத்து விடுங்கள் என பலமுறை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் காலம் தாமதம் செய்ததோடு அலைக் கழித்ததால் விஜயராஜ் இது குறித்து திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் தீபக், பெரியசாமி, பழனிவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி அவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற திட்டக்குடி போலீசார் அவரை இன்று அதிகாலை கைது செய்தனர். பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.