Police Department News

தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு- அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு- அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நர்சாக இருக்கும் கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தில் ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை திரையிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாநில உளவுதுறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் தியேட்டர்கள் முன்பு முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் அந்த படத்தை திரையிடாமல் இருந்தால் நல்லது. இந்த படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் மனுவும் அளித்து உள்ளனர். இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே வருகிற 5-ந்தேதி படம் வெளியாகிறதா என்பது பற்றி திரைத்துறையினரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம். அதே நேரத்தில் மற்ற மொழிகளில் படம் வெளியாவதை பார்த்து எந்த மாதிரி சூழல் நிலவுகிறது என்பதையும் பார்த்து பின்னர் முடிவு எடுக்கலாம்.

இவ்வாறு உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

இதற்கிடையே ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட யாரும் இதுவரை முன்வரவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் படத்தை தயாரிப்பாளரே வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றியும் தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் வாழக்கூடிய சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், காஷ்மீர் ஃபைல்ஸ், புர்கா, கேரளா ஸ்டோரி என தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்பான திரைப்படங்கள் பொய்யையும், அவதூறையும் கலந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடுகள் குறித்த தவறான பார்வையை வேண்டுமென்றே வெளியிடுவது, பொது சமூகத்திடம் அச்சத்தை விதைப்பது போன்றவை இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற திரைப்படங்கள் சங்பரிவார்கள் முன்னெடுக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு வலுசேர்க்கவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சமூகங்களுக்கிடையே வன்மத்தை, மத மோதலை உருவாக்கவும், அமைதியை சீர்குலைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏராளமாக உள்ளபோதும், அதுபற்றி பேசாமல் அவதூறை பரப்பி, அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரை படங்கள் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இந்த திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.