
திண்டுக்கல்
திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை
தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த ராமையா மகன் பொன்ராஜ் (47). தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது 17 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த விவசாயி பொன் ரமேஷ் என்பவரது வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார்.
இதே போல கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி பண்ணைக்காடு பகுதியில் சண்முகம் மனைவி வீரலட்சுமி வீட்டில் பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். இது பற்றி பொன் ரமேஷ் மற்றும் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாண்டி குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து இரு வீட்டிலும் தங்க நகைகளை திருடிய பொன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இந்த வழக்கை விசாரித்த கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் 2 திருட்டு வழக்குகளிலும் தலா 3 ஆண்டுகள் என மொத்தம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ரூ.20 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். கொடைக்கானல் கீழ் மலையில் இரண்டு திருட்டு வழக்குகளில் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
