சிவகங்கை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சிக் குட்பட்ட கோவில்பட்டி விளக்கு பகுதியில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதில் சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னமராவதி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் பஸ்களில் சென்ற பயணிகள் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தன் சொந்த செலவில் ஜே.சி.பி. எந்திர உதவியுடன் சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தார். இரவு நேரம் என்று கூட பாராமல் துரிதமாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டினர்.
மேலும் சாலையோரத்தில் காய்ந்து பட்டுப்போன நிலையில் இருந்து வரும் மரங்களை அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் துறை சார்ந்த அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.