சிவகங்கை மாவட்டத்தில் பணத்துடன் உண்டியலை திருடிச்சென்ற கொள்ளையன்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி- வேங்கை பட்டி ரோட்டில் தனியா ருக்கு சொந்தமான கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா சன்னதியும் உள்ளது.
இங்கு ஒரு அடி உயரத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இதில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் கோவிலை வழக்கம் போல் மூடிவிட்டு கோவில் ஊழியர்கள் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையன் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து சாய்பாபா சன்னதியில் பணத்துடன் இருந்த உண்டியலை திருடிசசென்று விட்டான்.
இன்று காலை வழக்கம் வழக்கம் போல் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் கோவிலை திறந்தார். அப்போது சாய்பாபா சன்னதியில் இருந்த உண்டியல் திருட்டு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இது பற்றி அவர் கோவில் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உண்டியல் திருடப்பட்டது பற்றி சிங்கம்புணரி போலீசில் கோவில் நிர்வாகி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது திருடப்பட்ட உண்டியல் அருகில் உள்ள வர்த்தக சங்க கட்டிடத்தின் மாடியில் கிடப்பது தெரியவந்தது. அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையன் உண்டியலை அங்கு போட்டு சென்று உள்ளான். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை.
அங்கு கண்காணிப்பு காமிரா வசதி இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது தெரியவில்லை. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.