மதுரையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உண்ணாவிரதம்
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தமிழ்நாடு கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், மகுடம் சக்தி, ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் தொலை தொடர்பு ஆணையம் டிராய் அமைப்பு என்.டி.ஓ.3 பரிந்துரையின் பேரில் கட்டண சேனல்கள் மிக கடுமையான கட்டண உயர்வை அறிவித்தது. எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு கேபிள் டி.வி.கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களும், கேபிள் டி.வி.ஆபரேட்டர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தலையிட்டு என்.டி.ஓ.3 பரிந்துரையை நிறுத்திவைத்து கேபிள் டி.வி.கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், எதிர்காலத்தில் இந்திய தொலைதொடர்பு ஆணையம் கொண்டுவரும் பரிந்துரையை பொதுமக்களும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தொழிலும் பாதிக்காத வண்ணம் இருக்கிறதா? என்று மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி நலவாரியம் அறிவித்திட வேண்டும், அரசு கேபிள் அனலாக் நிலுவை தட வாடகை குறித்து கூட்ட மைப்பு தலைவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.