Police Recruitment

சென்னை பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை வாலிபர்

சென்னை பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை வாலிபர்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு 11 மாத ஆண் கைக்குழந்தை ஒன்றும், ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தம்பதியினர் தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பெண் குழந்தை அழுகிற சத்தம் கேட்டு குழந்தையின் தாய் கண் விழித்து பார்த்தார். அப்பொழுது மர்ம நபர் ஒருவர் குழந்தையிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் கூச்சலிட்டார்.

அவரது கூச்சல் சத்தம் கேட்டு அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஊர் பொது மக்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவன் கஞ்சா போதையில் இருந்ததால் அவனது கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கயிறுகளால் கைகளை கட்டி சிறைபிடித்தனர்.

பின்னர் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் அதே பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (22) என்பதும் இவர் அப்பகுதியில் எந்நேரமும் கஞ்சா போதையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் இவர் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5 வயது ஆண் குழந்தையிடம் கையில் பணம் கொடுத்து ஆசை வார்த்தைகளை கூறி அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாகவும் அந்தக் குழந்தையின் பாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் கஞ்சா போதையில் கொடூர செயல்களில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தற்போது குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீசார் விக்கி என்ற விக்னேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டினப்பாக்கம் மட்டுமின்றி சென்னையில் பல இடங்களிலும் நள்ளிரவு நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் பல வாலிபர்கள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ரூ.1,500 பணத்துக்காக போதை வாலிபர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தார். அந்த மூதாட்டி சாலையோரத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர். அவர் யார்? அவரது சொந்த ஊர் எது? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கஞ்சா மற்றும் மது போதையில் இரவு நேரங்களில் நகை பறிப்பில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிப்பதற்காகவும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்து சென்று நகை பறிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.