
சென்னை புரசைவாக்கத்தில் 500 நடைபாதை கடைகள் அதிரடியாக அகற்றம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் மாநகராட்சி நடவடிக்கை
சென்னை புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் இருந்து கங்கா தீசுவரர் கோவில் செல்லும் சிக்னல் வரை ரோட்டின் இரு புறமும் தள்ளுவண்டி கடைகள், நடைபாதை கடைகள் என சுமார் 500 கடைகள் வைக்கப்பட்டு இருந்தன.
ஏற்கனவே இந்த பகுதியில் ஜவுளி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இருப்பதால் தி.நகர் ரங்கநாதன் தெருவை போல் எப்போதும் நெரிசல் மிகுந்த பகுதியாக மாறிவிட்டது.
கடைகள், சாலைகளையும் நடைபாதையையும் ஆக்கிரமித்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. 5-வது மண்டல அதிகாரி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், போக்குவரத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு கிறிஸ்டோபர், இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
திடீரென்று கடைகளை அகற்ற வந்ததால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் பிழைப்பை அழிப்பதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.
அதை கண்டு கொள்ளாமல் மாநகராட்சி ஊழியர்கள் அனைத்து கடைகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் லாரிகளில் அள்ளி சென்றார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
