
தஞ்சாவூர் | கூகுள் மேப் மூலம் செட்டிங் செய்து நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி செய்த 4 பேர் கைது
தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் மற்றும் பாபநாசம், மெலட்டூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி பணம், செல்போன், லேப்டாப், நகைகளை பறித்துச் சென்றதாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாபநாசம் டிஎஸ்பி பூரணி உத்தரவின்பேரில் அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் வனிதா தலைமையில், உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், ராஜேஷ்குமார் மற்றும் போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். விசாரணையின் ஒருபகுதியாக போலீஸார், அப்பகுதியில் செயல்பட்ட செல்போன் எண்கள் மற்றும் சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்த போது, வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸார், திருச்சியில் 3 நாட்கள் முகாமிட்டு, ஸ்ரீரங்கம், கொள்ளிடம் ஆற்றில் பதுங்கியிருந்த, திருச்சி, சர்க்கார்பாளையத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நாகேஷ்(20), கொண்டயம்பேட்டையைச் சேர்ந்த தயாளன் மகன் சீனிவாசன்(20), இதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் கண்ணன்(22), தாளக்குடியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சுரேஷ்(35) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனம், 2 வீச்சரிவாள், 10 செல்போன்கள் மற்றும் ஒரு மடிக்கணினி மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் வேறு ஏதேனும் தொடர்பில் உள்ளார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறியது, இவர்கள், திருச்சி, அரியலூர், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நள்ளிரவு சுமார் 12 மணிக்கு 2 இரு சக்கர வாகனங்களில் சுமார் 5-க்கும் மேற்பட்டவர்கள், கூகுள் மேப் மூலம் செட்டிங் செய்து நெடுஞ்சாலை வழியாகச் செல்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பணம் மற்றும் பொருள்களை கொள்ளையடித்துள்ளனர். இவர்கள் மீது, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவரம்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வழிபறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களுடன் வேறு யாரும் தொடர்பில் உள்ளார்களா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் எனத் தெரிவித்தனர்.
