
நெய்வேலியில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை- பொதுமக்கள் பீதி
கடலூர் மாவட்டம் நெய்வேலி சீனிவாச அவென்யூவில் வசித்து வருபவர் வேல்முருகன் (வயது 62). ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர்.
இவர் நேற்று சென்னையில் இருந்த தனது மனைவியை அழைத்து வர சென்றார். இன்று காலை மீண்டும் கணவன், மனைவி இருவரும் நெய்வேலியில் உள்ள வீட்டிற்கு வந்தனர்.
வீட்டின் முன்பக்க கதவு உடைந்து திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைந்து திறந்து இருந்தது.
பீரோவில் உள்ள பாதுகாப்பு அறையை பார்த்தபோது, அதிலிருந்த 20 பவுன் நகை, 1/4 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இத்தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்த முக்கிய தடயங்களை சேகரித்தனர். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
