மதுரை மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்காததால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாவினிபட்டியைச் சேர்ந்தவர் திருவாசகம் (42). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தர். 2 பேரும் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக வழக்கு மேலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு திருவாசகத்தின் மனைவியிடம் பாலசுந்தர் மற்றும் சிலர் மிரட்டினர். இந்த நிலையில் நேற்று நாவினிப்பட்டியில் இது குறித்து திருவாசகம் பாலசுந்தரிடம் தட்டிக் கேட்டார். இதனால் தகராறு ஏற்பட்டது. பாலசுந்தர் மற்றும் குருநாதன், பாண்டிச்செல்வம் ஆகிய 3 பேரும் திருவாசகத்தை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயப்பட்ட திருவாசகம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.