
போடி நீதிமன்றம் அருகே மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர்- டிரைவர் கைது
தேனி மாவட்டம் தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மணிமாலா (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மணிமாலா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு முறையீடு செய்திருந்தார். இதற்காக மணிமாலா கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் மணிமாலா பலத்த காயமடைந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மணிமாலாவை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த பாண்டித்துரை (22) என்பவரை பிடித்து போடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரமேஷ் தூண்டுதலின் பேரில்தான் மணிமாலாவை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்
இதனையடுத்து போலீசார் பாண்டித்துரை மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். போடி நீதிமன்றம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
