
சங்கரன்கோவில் அருகே விவசாயி வீட்டில் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பருவக்குடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது53), விவசாயி.
இவருக்கு பருவக்குடியில் 2 வீடுகள் உள்ளன. அதில் பழைய வீட்டில் முக்கியமான பொருட்களை வைத்துள்ளார். மேலும் அங்கு சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டு விட்டு இரவு தூங்குவதற்கு மட்டும் அவரது புதிய வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு 9 மணிக்கு பழைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு வீட்டை பூட்டி விட்டு தூங்குவதற்காக புதிய வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் அதிகாலை தனது வேலைகளை பார்பதற்காக அங்குள்ள விவசாய பொருட்களை எடுக்க பழைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் தங்க சங்கிலி, 3 ஜோடி தங்க கம்மல்கள், மோதிரம் மற்றும் அதனுடன் வைக்கப்பட்டிருந்த ரூ. 8 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டி ருந்தது தெரியவந்தது. கொள்ளைபோன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும்
இது குறித்து ராமச்சந்தி ரன் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.
