குடியிருப்போர் நலச்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
மதுரை மாநகராட்சி 67-வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து குடியி ருப்போர் நல சங்கத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்த பகுதியில் உள்ள சாலைகள் சரியில்லாமல் குண்டும், குழியுமாக இருக்கிறது. மேலும் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. பாதாள சாக்கடை வசதி இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சரியான முறையில் இல்லை. குடிநீர் தினசரி வழங்க வேண்டும். பொது சுகாதாரம் சரி இல்லை என வார்டு கவுன்சிலர் நாகநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட நாகநாதன் இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதற்கான முன் முயற்சிகளை செய்து வருகிறேன். பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து எடுத்து கூறி இருக்கிறேன்.
மேலும் மீண்டும் உங்கள் கோரிக்கை மனுவை காண்பித்து உடனடியாக உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற செய்வேன் என்று உறுதி கூறினார்.
இதில் மாநகராட்சி மத்திய மண்டல உதவி வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் ரகுநாதன், பில் கலெக்டர் அருண்குமார், தொழில் நுட்ப உதவி யாளர்கள் வடிவேல், அருணாசலம், மணிகண்டன், தீபன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.