Police Recruitment

திருமங்கலம் அருகே விபத்து- கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பலி

திருமங்கலம் அருகே விபத்து- கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பலி

திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது55). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்க நான்கு வழிச்சாலையை கடப்பதற்காக நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த முத்துபாண்டி(52), திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் வெங்கடசாமி(49) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். கட்டிட தொழிலாளிகளான இவர்கள் இருவரும், கரிசல்பட்டியில் வேலையை முடித்து கொண்டு தங்களது ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அவர்களது மோட்டார் சைக்கிள், ஓட்டலில் சாப்பாடு வாங்குவதற்காக நான்கு வழிச்சாலையை கடந்து சென்ற சந்துரு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளில் வந்த முத்துப்பாண்டி, வெங்கடசாமி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர்.

அவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறிது நேரத்திலேயே முத்துபாண்டி பரிதாபமாக இறந்தார். வெங்கடசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு வழிச்சாலையில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.