
போதைப்பொருள் விற்பது தெரிந்தால் உடனடியாக போலீசிடம் தெரிவிக்க வேண்டும்-உதவி கமிஷனர்
மதுரை அவனியாபுரம் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி இரு சக்கர வாகன பேரணி நடந்தது. அவனியாபுரம் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். பேரணியை போலீஸ் உதவி கமிஷனர் செல்வ குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அவனியாபுரம் பெரியார் சிலையில் தொடங்கி பஸ் ஸ்டாண்ட், செம்பூரணி ரோடு, காமராஜர் நகர், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி வழியாக விமான நிலையம் வரை சென்றனர். மேலும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு போதை பொருட் களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அவனியாபுரம் போலீஸ் நிலையம் முன்புள்ள பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவ- மாணவிகளுடன் போலீசார் இணைந்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர்.
பின்னர் போலீஸ் உதவி கமிஷனர் செல்வகுமார் பேசுகையில், போதைப்பொருள் பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியது. இதில் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே யாரேனும் போதைப் பொருள்களை விற்பது தெரிந்தால் உடனடியாக போலீசிடம் தொலை பேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.
மேலும் வீட்டில் நமது பெற்றோர்களிடம் போதை பொருள்களால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்க வேண்டும். போதைப் பொருட்களால் குடும்ப முன்னேற்றம் தடைப்படும். மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய போதைப்பொருள். பெற்றோர்களுக்கு மாணவர்கள் இதுகுறித்து எடுத்து ரைக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஏட்டு காதர் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
