
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரட்டைக்கொலை:இடம் தொடர்பாக தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டதால் கொன்றேன்-கைதான ராணுவ வீரர் வாக்குமூலம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் அசோக்ராஜ் (வயது 27). வக்கீல்.
இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் இருந்த போது, திடீரென்று பின்பக்க வாசல் வழியாக வந்த கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இதனை தடுக்க முயன்ற அசோக்ராஜின் அக்காள் அருள்ஜோதியின் (33) கைவிரலிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அங்கிருந்து வெளியே ஓடி வந்த கும்பல், சாலையோரம் நின்று கொண்டிருந்த அசோக்ராஜின் பெரியப்பா துரை ராஜை (55) வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடியது.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து ஆலங் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இடத்தகராறில் அதே பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இவர்கள் இருவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ், அவருடைய தந்தை குழந்தை பாண்டி (60), தாயார் ஜக்கம்மாள், உறவினர்கள் மகாராஜன் (32), குமார் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சுரேஷ் தனது வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர் மைனர் பாண்டி. இவருக்கு சொந்தமான நிலம், நெட்டூரில் அசோக் ராஜ் வீட்டின் அருகில் உள்ளது.
அதனை என் மூலம் விற்க ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த நிலம் தொடர்பாக அசோக்ராஜ் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக எங்களுக்குள் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த நான் சம்பவத்தன்று அங்கு சென்று அசோக்ராஜ், துரைராஜ் ஆகியோரை வெட்டிக்கொலை செய்தேன். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
