மதுரையில் டாக்டர் வீட்டில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நகையை அபேஸ் செய்த கார் டிரைவர்
மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு டாக்டரான இவரது வீட்டில் கார் டிரைவராக ஜெயராமன் என்பவர் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
நாராயணன் வயது மூப்பு காரணமாக வீட்டில் ஜெயராமனை அனைத்து பகுதிகளிலும் அவர் மீதான நம்பிக்கையின் பேரில் அனுமதித்ததுடன் தன்னுடைய கணக்கு வழக்குகளையும் பார்க்கும் பணியிலும் ஈடுபடுத்தினார்.
இந்த நிலையில் நாராயணனின் பணம் மற்றும் நகைகள் அடிக்கடி குறைய தொடங்கியது. இதற்கிடையே வீட்டின் தனி அறையில் பீரோவில் வைத்திருந்த 32 பவுன் தங்க நகை மற்றும் 135 பவுன் மதிப்புள்ள தங்கப்பொருள்களையும் கடந்து சில மாதங்களாக கொஞ்சம், கொஞ்சமாக மாயமானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணன், ஜெயராமன் மீது சந்தேகப்பட்டாலும் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லாததால் இந்த நகையை திருடியது யார் என்பதில் அவருக்கு குழப்பமான நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மதுரை எஸ்.எஸ். காலனி போலீசில் நாராயணன் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஓய்வு பெற்ற டாக்டரான நாராயணன் வீட்டில் வைத்திருந்த நகைகளை திருடியது யார் என்பதில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
வீட்டின் கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்படாமல் நகைகள் மாயமாகி இருப்பதால் அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் தான் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டிருக்க முடியும் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அடிக்கடி வந்து சென்ற கார் டிரைவர் ஜெயராமன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட் டது. ஆனாலும் ஜெயராமன் நகைகளை திருடவில்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஜெயராமன் அடிக்கடி வீட்டிற்கு வருவதும், வெளியே செல்வதுமாக இருந்ததை உறுதி செய்தனர். பின்னர் விசாரணை நடத்தியபோது 167 பவுன் நகைகளை திருடியதை ஜெயராமன் ஒப்புக்கொண்டார்.
அதன் அடிப்படையில் கார் டிரைவர் ஜெயராமனை கைது செய்த போலீசார் அபேஸ் செய்த நகைகளையும் மீட்டனர். இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பணி செய்த வீட்டிலேயே தனது கைவரிசையை காட்டிய கார் டிரைவர் ஜெயராமனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த திருட்டு சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.