Police Recruitment

பொள்ளாச்சி சாலையில் ஆபத்தை ஏற்படும் கம்பிகளை அகற்றிய போலீஸாரின் பொறுப்புணர்வு: பொதுமக்கள் பாராட்டு

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சேதமடைந்த சாலையில் விபத்தை ஏற்படுத்தும் கம்பிகளை வெட்டி எடுத்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பொள்ளாச்சி மீன்கரை சாலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கும், கேரளப் பகுதியிலிருந்து தமிழகத்துக்கு வந்து செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த வழியாக இரவு பகலாக வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலையில் சீனிவாசபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் கீழ் சாலை தரமாக அமைக்கப்படாததால் சாலையின் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளன.

இதன் காரணமாக, அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எஸ்ஐ முத்துச்சாமி, காவலர்கள் மார்கண்டன், தினேஷ் ஆகியோர் வாகனங்கள் தடையின்றி, பாதுகாப்பாகச் செல்லும் விதமாக சாலையில் இருந்த கம்பிகளை வெட்டி எடுத்தனர். இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் சென்று வருகின்றனர். காவலர்கள் சாலையைச் சீரமைத்த காட்சியைப் பார்த்த பொதுமக்கள் அவர்களின் செயலுக்குப் பாராட்டு தெரிவித்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது,‘‘சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டியது நெடுஞ்சாலைத் துறையின் பொறுப்பு. சாலையில் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளை அகற்றி சாலையைச் சீரமைக்க வேண்டியது தனது துறையின் பணி இல்லை என தட்டிக் கழிக்காமல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளை அகற்றிய போலீஸாரின் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.