
மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கும் கொலை குற்றத்திற்கும் உள்ள வேறுபாடு
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 300–
ஐபிசி பிரிவு 300 – மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கும், கொலைக் குற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இந்த பிரிவில் காண்போம். மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை எப்பொழுது கொலைக் குற்றமாக கொள்ளலாம், எப்பொழுது கொள்ளக் கூடாது என்பதற்கு கீழே சில விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன. அந்த விதி விலக்குகளுக்கு உட்பட்டு மற்ற சமயங்களில் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை கொலைக் குற்றமாக கொள்ள வேண்டும். அப்படி கொலைக்குற்றமாகவே கொள்ளத்தக்க நிலைகள் என்னவென்றால்,
- மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலை புரிந்து அதன் விளைவாக மரணம் ஏற்பட்டிருந்தால் அல்லது
- உடலில் ஏற்படுத்தப்பட்ட காயத்தால் ஒருவர் மரணமடையலாம் காயத்தை உண்டாக்கியவருக்கு தான் ஏற்படுத்தும் காயத்தால் அந்த நபருக்கு மரணம் உண்டாகும் என்று தெரியும். தெரிந்தும் அந்த காயத்தை கருத்துடன் உண்டாக்குதல் அல்லது.
- ஒருவருடைய உடலை காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒரு காரியம் செய்யப்படுகிறது அதனால் மரணம் விளைவிக்கின்றது அப்படி உண்டாக்க வேண்டும் என்று எண்ணிய காயம் இயற்கையின் சாதாரண போக்கில் மரணமடைய செய்வதற்கு போதுமானது என்று அறிந்திருத்தல், அல்லது
- தான் செய்யும் காரியம் அபாயகரமானது அதனால் மரணம் சம்பவிக்கும் அல்லது பெரும்பாலும் மரணத்தை விளைவிக்கக் கூடிய உடல் காயம் ஏற்படும் என்று அறிந்திருந்தும் அத்தகைய காரியத்தைப் புரிதல் அத்துடன் அந்த காரியம் செய்வதற்கு எந்தவிதமான அவசியமும் இல்லாதிருத்தல்.
உதாரணம்:
a) பழனி என்பவனைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துடன் ராமு துப்பாக்கியால் சுடுகிறான். பழனி மரணம் அடைகிறான். ராமு கொலைக்குற்றம் புரிந்தவனாகிறான்.
b) சண்முகத்துக்கு நோய்வாய்ப்பட்டு உடல் பலவீனமாகியுள்ள நிலையில் பலமான அடி அவனை சாகடித்து விடும் என்று அறிந்துள்ள முருகேசன் அவனுக்கு உடம்பில் காயம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் ஓங்கியடிக்கிறான் அதன் விளைவாக சண்முகம் மரணமடைகிறான் உடல் நலமாக உள்ள மனிதனுக்கு அந்த அடி மரணத்தை உண்டாக்காது இருப்பினும் முருகேசன் கொலை குற்றம் புரிந்தவன் ஆகிறான் முருகேசனுக்கு சண்முகத்தின் உடல் நிலைமை பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் காயம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அவன் சண்முகத்தை அடித்திருந்தால் அவன் மீது கொலை குற்றம் சாராது. ஏனெனில் அந்த அடி மரணத்தை உண்டாக்க கூடிய அடி அல்ல
C). முனியன் முத்துவை காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் கத்தியால் வெட்டுகிறான் அல்லது தடியால் அடிக்கிறான் அவன் உண்டாக்க நினைத்த காயாம் சாதாரணமாக யாருக்கும் மரணத்தை உண்டாக்க கூடியது காயம் பட்ட முத்து மரணமடைகிறான் முனியன் முத்துவை கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் காரியம் செய்ய வில்லை இருப்பினும் முனியன் மீது கொலை குற்றம் சாரும்
(D.) ராமசாமி ஒரு காரணமும் இல்லாமல் ஒரு கூட்டத்தை நோக்கி சுடுகிறான் ஆனால் கூட்டத்திலிருந்தவன் மரணமடைகிறான் யாரையும் கொள்ள வேண்டும் என்ற முன் யோசனையுடன் ராமசாமி கூட்டத்தை நோக்கி சுட வில்லை இருப்பினும் ராமசாமியின் மீது கொலைக்குற்றம் சாரும் மரணம் விளைவிக்கும் குற்றம் எப்போழுதும் கொலைக் குற்றம் ஆகாது. When culpable Homicide is note murder
விதிவிலக்கு
1) திடீரென்று தூண்டி விடப்பட்ட.உணர்ச்சிகளை அடக்க முடியாமல் நிதானத்தை இழந்து விட்ட சூழ்நிலையில் தன்னை கோபப் படுத்தியவரை தாக்கி மரணமடைய செய்தாலும் அல்லது கோபத்தில் தவறுதலாக வேறோரு நபரின் மரணத்தை உண்டாக்கியிருந்தாலோ மரணத்தை விளைவிக்கும் குற்றம் கொலை குற்றமாகாது. மேலே கூறப்பட்ட விதி விலக்கு இங்கே சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்
1)அந்த கோப உணர்ச்சியை நாமே தேடிப்பெற்றதாக இருக்க கூடாது அதாவது நாம் வலிந்து ஒருவரை கொள்ள வேண்டும் அல்லது தாக்க வேண்டும் என்று வம்புக்கு போனதால் விளைந்த சண்டையில் கோபம் ஏற்பட்டு நிதானம் இழந்ததாக இருக்க கூடாது
2) ஒரு பொது ஊழியர் சட்டப்படி தன் கடமையை ஆற்றும் போது அத்தகைய உணர்ச்சி எழுவதற்க்கு இடமில்லை சட்டப்படி ஒரு செயல் நடைபெறுவதை கண்டு பொங்கியெழ முடியாது
3) ஒருவன் தன் தற்காப்பு உரிமையை சட்டப்படி பயன்படுத்துவதால் தன்னுடைய உணர்ச்சிகள் கிளர்ந்து எழுந்தன என்ற வாதமுமம் ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது.
விளக்கம்.
கொலைபுரிய தூண்டும் அளவுக்கு கோபம் ஏற்பட கூடிய சூழ்நிலை உருவாகி இருந்ததா இல்லையா என்பதை அந்த சூழ்நிலையை ஒட்டித்தான் முடிவு எடுக்க வேண்டும்
உதாரணம்
1) முருகனால் கோபம் ஊட்டப்பட்ட முனியன். அந்த கோபத்தை அடக்க முடியாததன் விளைவால் முருகனுடைய குழந்தையை கொன்று விடுகிறான் இங்கு முனியன் மீது கொலைக் குற்றம் சாரும் ஏனெனில் கோபத்தை தூண்டியவன் முருகனே அவனுடைய குழந்தையல்ல அத்துடன் முருகனுடைய குழந்தை அந்த கோபத்தின் விளைவாக தவறுதலாக கொள்ளப்பட்டு விட்டது என்று சொல்ல முடியாது.
2) ஒரு நீதிபதியின் முன் கொண்டு வரப்பட்ட ஒருவரை பார்த்து அந்த நீதிபதி உன்னுடைய பேச்சை என்னால் நம்ப முடியாது நீ பொய் சாட்சி கூறுகிறாய் சத்தியத்திற்க்கு முரணாக பேசுகிறாய் என்று கூறுகிறார் அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கோபத்தில் நீதிபதியை கொன்று விடுகிறான் அந்த நபர் கொலை குற்றம் புரிந்தவன் ஆகிறான்
விதி விலக்கு
2) தன்னை அல்லது தன்னுடைய உடமையை காத்து கொள்ளும் பொருட்டு போராடும் நபர் சில சமயங்களில் சட்ட வரம்பை மீறி செயல்பட நேரிடலாம் அப்போது தன்னை தாக்குவோரை கொல்ல வேண்டும் என்ற கருத்தும் முன் யோசனையும் இன்றி பிறரை கொல்ல நேரிடலாம் அதனால் அதனால் ஏற்பட்ட மரணத்திற்காக அந்த நபருக்கு மரணம் விளைவிக்கும் குற்றம்தான் சாரும்.கொலைக்குற்றம் சாராது.
உதாரணம்
ஒருவரை சாட்டையால் அடித்து துன்புறுத்துகின்றனர் சாட்டையடியால் கொடுங்காயம் ஏற்படுத்த முடியவில்லை இருப்பினும் அடிபட்டவர் தன்னை தற்காத்து கொள்வதற்காக கைத்துப்பாக்கியால் சுடுகிறார் அடித்தவர் மரணமடைகிறார் சாட்டையடிக்கு பிரதியாக துப்பாக்கியால் சுடுவது வரம்பு மீறிய செயலானாலும் சுட்டவர் அதை தவிர தன்னை காப்பாற்றி கொள்ள வேறு வழியே இல்லை என்று எண்ணி அப்படி சுட்டு இருக்கிறார் எனவே சுட்டவர் மீது கொலைக்குற்றம் சாராது. மரணத்தை விளைவிக்கும் குற்றம் மட்டும்தான் சாரும்.
விதிவிலக்கு.
3) ஒரு பொது ஊழியர் அல்லது கடமையாற்றும் பொது ஊழியருக்கு உதவி செய்யும் ஒருவர் பொது நீதியை நிலை நாட்டும் வகையில் செயல்பட்டு அதனால் மரணம் சம்பவித்தால் அது கொலை குற்றமாகாது ஏனெனில் பொது நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறாரே இன்றி யாரையாவது கொள்ள வேண்டும் என்ற கெட்ட எண்ணம் அவருக்கு இல்லை எனவே அவர் மீது மரணத்தை விளைவிக்கும் குற்றம்தான் சாரும்
விதி விலக்கு
4) முன் கூட்டியே திட்டமிடாமல் திடீரென்று ஏற்படும் ஒரு சண்டையில் உணர்ச்சிகள் கொந்தளிப்பதால் மரணம் ஏற்படுகிறது அந்த சண்டையில் எதிரியின் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு அநியாயமாக போராடவில்லை கொடூரமாகவோ அல்லது அசாதரனமாகவோ யாரும் காரியம் செய்யவில்லை இந்த நிலையில் ஏற்பட்ட மரணம் கொலையாகாது மரணத்தை விளைவித்த குற்றத்தையே சாரும்
விளக்கம்.
சண்டையை யார் தூண்டினார்கள் அல்லது யார் முதலில் வன்செயலுக்கு ஆயத்தமானார்கள் என்ற பிரச்சனை இங்கு முக்கியமில்லை
விதிவிலக்கு
5) 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தன்னிச்சையாக மரண ஆபத்தை வலிந்து அல்லது ஏற்க முன் வந்தால் அல்லது மரணமடைந்தால் அதனை கொலை குற்றமாக கூறமுடியாது மரணம் விளைவித்த குற்றமாகத்தான் கொள்ளமுடியும்
உதாரணம்.
தாஸ் என்பவரால் தூண்டப்பட்டு குமார் என்ற பையன் தற்கொலை செய்து கொள்கிறான் குமாருக்கு 18 வயது ஆகவில்லை ஆகவே தன்னிச்சையாக ஒரு காரியத்தை அவனால் லிந்து செய்ய முடியாது எனவே தாஸ் மீது கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றம் சாரும்
