Police Recruitment

மன அழுத்தம் போக்கும் வகையில் போலீசாருக்கு புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும்-டி.ஜி.பி.

மன அழுத்தம் போக்கும் வகையில் போலீசாருக்கு புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும்-டி.ஜி.பி.

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமை தாங்கினார். இதில் மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்குவது குறித்தும், குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

கூட்டத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேசியதாவது:-

போலீசார் பணியின் போது மன அழுத்தமின்றி வேலை பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சைபர் கிரைம் குற்றங்களை தீவிர கவனத்துடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொது மக்களுடன் நட்புறவை பேணி காக்க வேண்டும்.

உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் போலீசாருக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது.

அதனை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக் ரேசில் ஈடுபடுவோர்களை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.