
கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர்.
இதில் பாண்டி உயிரிழந்தார். இது குறித்து பாண்டியின் மகள் மலர்மணி அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியம், மணி, விஜயபாண்டி, பிரேமா ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் பாண்டியை கொலை செய்த மணி, விஜயபாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் பாக்கியம், பிரேமா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.
