வாசுதேவநல்லூரில் 102 பவுன் கொள்ளை வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படை அமைப்பு
வாசுதேவநல்லூர் புது மந்தை விரிவாக்கம் 3- வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். சித்தா டாக்டரான இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
இவர் தனது குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவிற்கு அருகே வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 102 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களை மர்மநபர்கள் கொள்ளை யடித்து சென்றது தெரியவந்தது.
கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மதிப்பு சுமார் 17 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவஇடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, அவிவீனா மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் மூலமாக கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அது வீட்டை சுற்றி வந்து வயல் காட்டில் நின்று விட்டது. சுற்றியுள்ள வீடுகளில் சி.சி.டி.வி. காமிரா உள்ளதா? சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் வந்தார்களா? என்பது குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடைபெற்ற பகுதியில் உள்ள வீடுகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படவில்லை. ஆகவே அப்பகுதியில் போலீசார் சி.சி.டி.வி. காமிரா பொருத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கொள்ளையர்கள் ஆள் இல்லாததை நோட்டம் விட்டு தெரிந்து கொண்டு காம்பவுண்ட் கீழ்புறம் வடக்கு முலையின் வழியாக காம்பவுண்ட் சுவற்றின் மீது ஏறி வீட்டின் உள்ளே குதித்து முன்புறம் உள்ள கதவை உடைத்து, வீட்டில் இருந்த சாவியின் மூலமாக பீரோவை திறந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் எடுத்து சென்றுள்ளனர்.
இப்பொருட்கள் அதிகளவில் இருந்ததால் அருகே இருந்த பீரோவில் பணக்கட்டுகளை எடுத்துச் செல்லவில்லை. கொள்ளையர்கள் யார்? என தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.