
7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் கைது வேண்டாம்: உச்சநீதிமன்றம்
அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனைக்குரிய குற்றங்கள் தொடா்பான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
இது குறித்து தேவையான உத்தரவுகளை அடுத்த 8 வாரங்களுக்குள் பிறப்பிக்குமாறு உயா்நீதிமன்றங்கள், அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச காவல் துறை இயக்குநா்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மனைவி தொடா்ந்த வழக்கில் கணவருக்கு ஜாமீன் மறுத்த ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த அறிவுறுத்தலை வழங்கியது.
மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், பிகாா் அரசு, அா்னேஷ் குமாருக்கு இடையே நடந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டபோது பிறப்பித்த அறிவுறுத்தல்களை மீண்டும் உறுதிப்படுத்தினா்.
மேலும், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘குற்றஞ்சாட்டப்பட்டவரை அவசியமின்றி போலீஸாா் கைது செய்வது, அத்தகைய நபா்களைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்கள் அனுமதி வழங்குவதைத் தடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். சாதாரணமாக, நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டும். நீண்ட தண்டனைக்குரிய குற்றங்கள் அல்லது தீவிர குற்றங்கள் தொடா்புடைய வழக்குகளில் மட்டுமே நீதிமன்றங்கள் சிறப்பு கவனத்துடன், விவேகத்துடன் செயல்பட வேண்டும். தற்போது விசாரணையிலுள்ள இந்த வழக்கில் மட்டுமின்றி அபராதத்துடன் அல்லது அபராதம் இல்லாமல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்கள் தொடா்புடைய அனைத்து வழக்குகளிலும் இந்த அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும்.
அடுத்த 8 வாரங்களுக்குள், ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்து கீழமை நீதிமன்றங்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்க்கும் வழிமுறைகளை முறையான அறிவுறுத்தல்கள்/துறை சாா்ந்த சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்படுவதை அனைத்து உயா்நீதிமன்றங்களும், காவல்துறை தலைமை இயக்குநா்களும் உறுதிபடுத்த வேண்டும்.
இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றத் தவறும் காவல்துறை அதிகாரிகள், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கும், நீதிமன்ற அவமதிப்புக்கும் உள்ளாக்கப்படுவாா்கள்’ என்று அறிவுறுத்தினா்.
