
தவற விட்ட நகையை மீட்டுக்கொடுத்த மாணவிகளுக்கு பாராட்டு
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் கமுதி அருகேயுள்ள மறைக் குளம் கிராமத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் நேற்று காலை சசிகலா பள்ளிக்கு செல்வதற்காக நரிக்குடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது தனது கைப்பையில் உள்ள அவரது நகைகளை சரிபார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் உலக்குடி பேருந்து வரவே அவசர அவசரமாக சசிகலா பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டார். அங்கு சென்று தனது கைப்பயை பார்த்தபோது அதில் இருந்த 2½ பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக நரிக்குடி பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் தனது செயின் கிடைக்காததால் நகை காணாமல் போனது குறித்து நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த நிலையில் நரிக்குடி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப் பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் நேற்று காலை பள்ளிக்கு செல்ல நரிக்குடி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கீழே கிடந்த 2½ பவுன் தங்கச் செயினை எடுத்து அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் சோணை முத்துவிடம் விவரத்தை கூறி நகைையை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அவர் நரிக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியபோது ஆசிரியை சசிகலா பஸ் நிலையத்தில் தவற விட்ட 2½ பவுன் நகையை மாணவிகள் மீட்டு கொடுத்தது தெரியவந்தது.
நகை கிடைத்தது குறித்து ஆசிரியை சசிகலாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நரிக்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் தகுந்த அடையாளங்களை கூறி நகையை பெற்றுக் கொண்டார்.
தொலைந்து போன தங்கசெயின் கிடைக்க காரணமாக இருந்த இளம்வயது மாணவிகளின் நேர்மையான செயலை கண்டு நரிக்குடி காவல் துறையினர் மற்றும் தமிழாசிரியை சசிகலா, தலைமையாசிரியர் சோனை முத்து ஆகியோர் பாராட்டினர்.
