குற்றமில்லா சமூதாயம் அமைய கல்வி முக்கியம் கோவையில் இடை நின்ற மாணவர்களை கண்பிடித்து பள்ளியில் சேர்க்கை போலீஸாரின் பெரிய விஷயம் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்க்கு குவியும் பாராட்டு!
இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுப்பதற்காக, கோவையில் ஆப்ரேசன் ரிபூட் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்காணித்து அவர்களை பள்ளியில் சேர்த்து வருகிறோம், இதுவரை 173 பேரை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளோம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
குற்றமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், இளம் வயதில் குழந்தைகள் சரியான கல்வி, ஒழுக்கம், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை கிடைக்க வேண்டும். அதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்றால், முதலில் படிக்க பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும். பள்ளியில் பாதியில் படிப்பை நிறுத்துவதை தடுக்க வேண்டும். ஒருவேளை சந்தர்ப்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டாலும், அவர்களை தேடி கண்டுபிடித்து மீண்டும் பள்ளியில் சேர வைக்க வேண்டும். இதை செய்தாலே நல்ல மாணவர்களை உருவாக்க முடியும். அவர்கள் முன்னேறி, அவர்களின் குடும்பமும் கல்வியால் முன்னேறிவிடும். இதற்கான முன்னெடுப்பை கோவை காவல்துறை எடுத்து வருகிறது.
கோவை மாநகரில் இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து மாநகர காவல்துறையினர் பள்ளிகளில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 35 மாணவர்களை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை மாநகர காவல்துறை மாணவர்களுக்காக ‘ஆப்ரேசன் ரிபூட்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளை தேடி கண்டுபிடிக்கிறார்கள். பின்னர் அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கிறார்கள்.
கோவை போலீசாரால் இப்படி பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி நடந்தது.
இந்த கூட்டம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுப்பதற்கும், நீண்ட கால அடிப்படையில் குற்றங்கள் நடப்பதை தடுக்கவும் நாங்கள் (காவலர்கள்) விரும்புகிறோம். இதற்காக ஆப்ரேசன் ரிபூட் திட்டத்தின் கீழ் நாங்கள் பள்ளிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளை தேடி கண்டுபிடிக்கிறோம்.
தொடர்ந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்களை சந்தித்து பேசி கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறோம். எக்காரணத்தால் பள்ளியிலிருந்து நின்றார்கள் எனக் கண்டறிந்து அந்த குறைகளை சரி செய்கிறோம்.
இதுதவிர போலீஸ் அக்கா திட்டத்தில் உள்ள காவலர்கள், பெண்கள், சிறார்களுக்கான உதவி மைய காவலர்கள், குழந்தைகள் நலப்பிரிவு காவலர்கள் ஆகியோர் மூலம் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து, பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளின் விவரங்களை பெற்று அவர்களிடம் பேசி மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள்.