
போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் மாடுகளை பிடிக்கும் புதிய வாகனம்.. மாநகராட்சி அசத்தல் முடிவு
திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கால்நடைகளை பறிமுதல் செய்ய ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதை கொண்டு கால்நடைகளை சிறைபிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளின் குறுக்கே கால்நடைகள் சுற்றி திரிகின்றன. கால்நடைகள் கண்டபடி சாலைகளில் இருப்பதால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்படுகிறது.முக்கிய நெடுஞ்சாலைகளிலேயே சில நேரங்களில் கால்நடைகள் படுத்துக் கொள்கின்றன. அவை நகர்ந்து போக மறுப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து பலரும் திருச்சி மாநகாரட்சிக்கு கால்நடைகள் குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கி உள்ளனர்.
அதேநேரம் பறிமுதல் நடவடிக்கைகளின் போது மாடுகளை வாகனங்களில் ஏற்றுவது பெரும் சவாலாக இருப்பதால் கால்நடைகளை சிறை பிடித்து கொண்டு செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்ட 2 சிறப்பு வாகனங்களை திருச்சி மாநகராட்சி வாங்கியுள்ளது.
முன்னதாக இருந்த வாகனத்தில் கால்நடைகளை ஏற்றி செல்வது சவாலாக இருந்த காரணத்தால் ரூ.30 லட்சம் செலவில் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் கூடிய இந்த வாகனங்கள் வாங்கி உள்ளது திருச்சி மாநகராட்சி.
இந்த சிறப்பு வாகனம் சிரமமின்றி கால்நடைகளைப் பிடிக்க உதவுவதாகவம், கால்நடைகளை கையாள்வது குறித்த விமர்சனங்களும் எழுவதில்லை என்றும், திருச்சி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் கால்நடைகளை சிறைபிடிக்க இது பயன்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் 6 மாடுகள் வரை பறிமுதல் செய்து கோணக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான காப்பகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும் இந்த ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள் சாலைகளில் கால்நடைகள் சுற்றி தெரியும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரம் மாடுகளை கையாள்வதில் முன் அனுபவம் பெற்ற 10 பேர் கொண்ட ஒரு குழு மாடுகளை பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தி உள்ளனர். அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட 5 கன்றுகள் உட்பட 10 கால்நடைகளை அபராதம் செலுத்தி மீட்க முன்வராத காரணத்தால், ரூ. 74,000 தொகைக்கு அவைகளை ஏலம் விட்டிருக்கிறது திருச்சி மாநகராட்சி. புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் திருச்சியில் அதிக மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இனிமேல் திருச்சியில் மாடுகள் சுற்றினால கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
