
காவல் நிலையம் செல்லாமல் காவல்துறையில் புகார் செய்வதெப்படி?
காவல் நிலையங்களுக்கு செல்லாமலே கூட குற்றம் குறித்த தகவல் சொல்லி அதன் பிறகு தேவைப்பட்டால் வழக்கு பதிவு செய்து உடனடி நிவாரணம் பெறலாம் இது எந்த வகையான குற்றமாக இருந்தாலும் சரி யாருக்கு நடந்தாலும் சரி இதற்காக உங்களுக்கு ஒரு பைசா செலவு கூட கிடையாது என்பது ஆச்சரியமான
விசயம் நீங்கள் காவலர்களை தேடி செல்ல வேண்டியதில்லை மாறாக காவலர்கள் உங்களை தேடி அல்லது சம்பவ இடத்தை தேடி வருவார்கள்.
இது போன்ற சிறப்பானதொரு வழி இருக்கிறது என்பதை பலர் அரைகுறையாக அறிந்துள்ளனர் என்றாலும் இந்த சிறப்பான வழியை யாரும் அதிகமாக பயன்படுத்துவது கிடையாது.
அவசர போலீஸ் 100 என்ற நிலைபேசி எண்தான் இந்த சிறப்பான வழி சாலை விபத்தா? வீட்டில் திருட்டா? போலீஸ் நடத்தும் அடிதடியா? ரவுடிகளின் அடிதடியா? கடத்தல் நிகழ்சியா? இப்படி எந்த விதமான சட்ட விரோதமான செயலாக இருந்தாலும் நீங்கள் எந்த நிலை பேசியிலும் உலா பேசியிலும் 100 என்னும் அழைப்பு செய்தால் மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு இணைப்பு கிடைக்கும் இந்த காவல் கட்டுப்பாட்டு அறையானது அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும்.
நீங்கள் தகவல் சொல்லும் போது அந்த தகவல் உண்மையானதா? அல்லது வதந்தியா? என்பதை அறியும் முயற்சியாக இல்லா விட்டாலும் உங்களைப்பற்றிய தகவலை கேட்பார்கள் உங்களுக்கே பிரச்சனை என்ற நேர்வில் உங்களை பற்றிய தகவலை கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும்
இதன் அடுத்த கட்டமாக அவர்களே தாங்கள் குற்றம் குறித்து தெரிவித்த பகுதிக்கு அதிகாரவரம்புள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து நடவடிக்கையெடுக்க அறிவுறுத்தல் செய்வார்கள் இதன் காரணத்தால் உள்ளூர் காவல்துறையின் செயல்பாடுகள் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்
இதில் முக்கியமாக உள்ளூர் காவல்துறையினரே சட்டத்திற்கு புறம்பாக செயல்படும்போது தகவல் தரலாம். என்பதையும் மறந்து விடாதீர்கள் அப்படி தரப்படும் தகவல் கிடைத்தும் உள்ளூர் காவலர் எச்சரிக்கையாகி சட்ட விரோத செயலை நிறுத்தி கொள்வார் அதோடு சட்ட விரோதமாக காவலில் வைத்திருப்போரை விடுவித்து விடுவார் அல்லது சட்டப்படி நீதி மன்றத்தில் ஒப்படைத்து விடுவார் என்பதில் சற்றும் ஐயமில்லை.
