ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளத்தில் ஏற்காடு ஒன்று. இதற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறைகளில் வருகிறார்கள். இந்தச் சூழலில் நேற்று காலை ஏற்காடு காவல்துறைக்கு ஒரு தகவல் சென்றுள்ளது. அதில், ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே சூட்கேஸ் ஒன்று கிடப்பதாகவும், அதிலிருந்து அழுகிய துர்நாற்றம் வெளிவருவதாகவும் கூறியுள்ளனர்.
அதன்மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான போலீஸார், சாலையிலிருந்து சுமார் 10 அடி பள்ளத்தில் நீல நிற சூட்கேஸ் கிடந்துள்ளதைப் பார்த்துள்ளனர். பின்னர் தகவலை உறுதி செய்துகொண்டு, உடனே மாவட்ட எஸ்.பி அருண் கபிலனுக்குத் தகவலளித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த எஸ்.பி, சூட்கேஸை திறந்து பார்த்தபோது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
பின்னர் உடனே தடய அறிவியல் உதவி இயக்குநர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தபோது, இறந்த பெண்ணின் காலில் கறுப்புக்கயிறு கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இறந்துபோன பெண் யார்… கொலைசெய்து உடலை சூட்கேஸில் அடைத்து வீசியது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.