
தெருநாய்கள் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய சட்டப்படி, தெருக்களில் இருந்து நாய்களை அகற்றுவது சட்டவிரோதமானது மற்றும் நாய்களை விரட்டக் கூடாது. எனவே, ஒரு நாய் தெருவில் வந்துவிட்டால், அந்த நாயை யாராவது தத்தெடுத்தால் ஒழிய, அது அங்கேயே தங்குவதற்கு முழு உரிமை உள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நாய்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தொல்லையாக இருந்தால், மாநகராட்சி ஊழியர்கள் நாய்களைக் கொல்லலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கடந்த 2008 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ(ஜி) கூறுவது என்னவென்றால், “வனவிலங்குகளைப் பாதுகாப்பதும், அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும்.”
தெருநாய்களுக்கு உணவளிப்பது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டதுதான் என்றும், மக்கள், தங்களது குடியிருப்புப் பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவளிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு சென்று கருத்தடை செய்யலாம் என்றும், ஆனால் அதன்பிறகு, எங்கிருந்து நாய்கள் கொண்டு செல்லப்பட்டதோ, அவ்விடத்திலேயே கொண்டு சென்று விட வேண்டும் என்றும் விதிகள் உள்ளன.
