தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடக்கம்
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமோஷா முபீன் என்பவர் உரிழந்தார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி அப்பிரிவை உருவாக்கும் பணியில் தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் ஈடுபட்டனர். முதல் கட்டமாக இந்தியாவில் தீவிரவாத தடுப்புப் பிரிவு செயல் பாட்டில் உள்ள ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று, அந்தப் பிரிவில் உள்ள போலீசாருக்கு அளிக்கப்படும் பயிற்சி, தேவையான கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்தனர்.
பின்னர் இந்த சிறப்பு பிரிவுக்கான ஒரு வரைவுத் திட்டத்தை தயாரித்து தமிழக அரசின் அனுமதிக்கு வழங்கினர். அந்தத் திட்டத்தில் ஒரு பயிற்சி பள்ளியைத் தொடங்கி, 18 வயதில் இருந்து 22 வயதுடைய திறமையான, துணிச்சல் மிக்க இளைஞர்களை போலீசில் இருந்து தேர்வு செய்வது, அவர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிப்பது, முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவைத் தொடங்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தமிழக போலீசின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்புப் பிரிவைத தொடங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அமுதா உத்தரவிட்டார். இதற்காக ரூ.60.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இப்பிரிவுக்கு காவல் துறையில் இருந்து 190 பேரை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் அமைச்சுப் பணியாளர் இடங்களையும் புதிதாக உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக உருவாக்கப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவானது டி.ஐ.ஜி. தலைமையில் செயல்படும். இப்பிரிவில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள், 5 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 துணை சூப்பிரண்டுகள், 31 இன்ஸ்பெக்டர்கள், 61 சப்-இன்ஸ்பெக்டர்கள், 12 தொழில்நுட்ப உதவியாளர்கள், 130 ஏட்டுகள், 3 போலீசார், 33 போலீஸ் டிரைவர்கள் ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.