
சமூகத்தில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: நீதிபதி வேதனை
சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 213 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன், அவரது சகோதரர் ரவி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது குபேந்திரன் தனக்கு ஜாமின் அளிக்கும் படி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இல்லை. காவல்துறையினர் பெய்யான வழக்கில் கைது செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வணிக ரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார். போலீசார் உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து உள்ளனர். எனவே அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கொடிய பாதிப்பையே ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரருக்கு ஜாமின் அளிக்க முடியாது என்று உத்தரவிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
