சென்னையில் நெட்வொர்க் இல்லாததால் முடங்கிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள்! செயல்படாத ஏ.டி.எம்.சென்டர்கள்!
சென்னையில் ஏற்பட்டுள்ள நெட்வொர்க் பிரச்சனையால் ஜி பே, பே.டி.எம்., கியூ ஆர் கோட் ஸ்கேன்னர் உள்ளிட்ட எல்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் முடங்கியுள்ளன.
ஏ.டி.எம். செண்டர்களிலாவது பணம் எடுக்கலாம் என்று மக்கள் முயற்சித்தாலும் கூட பெரும்பாலான ஏ.டி.எம். செண்டர்கள் நெட்வொர்க் பிரச்சனையாலும், தண்ணீர் புகுந்ததாலும் இயங்கவில்லை. இதனால் சென்னையில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே மக்கள் சிரமம் அறிந்து 3 லட்சம் பேருக்கு குறையாமல் மதிய உணவு அரசு சார்பில் விநியோகம் செய்யப்படுகிறது. அதே போல் 2 லட்சத்து 85,000 பால் பாக்கெட்களும் இன்று காலை அரசு சார்பில் சென்னை மாநகரம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சென்னையை கடந்த 2 நாட்களாக புரட்டி எடுத்த மழை ஒரு வழியாக நள்ளிரவுடன் நின்றது. இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் சென்னை பழைய நிலைக்கு திரும்பிவிடும், தண்ணீர் முழுமயாக அகற்றப்பட்டுவிடும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதி கொடுத்திருப்பதோடு அரசின் சீரமைப்பு பணிகளுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.