2023 ஆம் ஆண்டில் 1526 சைபர் குற்றங்கள்: கமிஷனர் தகவல்
சைபர் க்ரைம் பிரிவின் மூலம் 2023ம் ஆண்டில் 1, 526 வழக்குகள் பதிவு செய்து, பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த வெளிநாட்டு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ₹2. 18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்க உதவியாக இருந்த வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கி பேசியதாவது: சைபர் குற்ற பிரிவில் 2023ம் வருடத்தில் மட்டும் பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது 1, 526 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் சீரிய உதவியுடன் குற்ற செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபர்கள் இழந்த 2 கோடியே 18 லட்சத்து 59 ஆயிரத்து 943 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இணைய வழி குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் பணியில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றம் செய்த நபர்களிடம் இருந்து பணத்தை மீட்க காவல்துறைக்கு உதவியாக இருந்த வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.