குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். குடியரசு தின விழா வரும் 26-ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஆளுநர்ஆர்.என்.ரவி ஏற்றிவைக்கிறார். விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். முப்படைகள், காவல் துறையின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன.
இந்நிலையில், குடியரசு தினவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், உளவுத் துறை ஐ.ஜி. செந்தில்வேலன், காவல் ஆணையர்கள் சந்தீப் ராய் ரத்தோர் (சென்னை),சங்கர் (ஆவடி), அமல்ராஜ் (தாம்பரம்), நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்,கடல் உட்பட எந்த வழியாகவும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்புஅரண் அமைக்க வேண்டும். விழாநடைபெறும் பகுதிகளுக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சட்டம் – ஒழுங்கு குறித்தும் ஆலோசனை நடத்தினார்