

சென்னை கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்து – நடந்தது என்ன?
சென்னை – ஆழ்வார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த செக்மேட் பார் என்ற கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை வியாழக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கேளிக்கை விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்.
விபத்து நடந்தது எப்படி? – “வியாழக்கிழமை மாலை 7.15 மணி அளவில் அவசர அழைப்பு வந்தது. அதில் செக்மேட் பாரின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (22 வயது), லில்லி (24 வயது) மற்றும் தமிழகத்தை சேர்ந்த சைக்ளோன் ராஜ் (48 வயது) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்த உடன் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், மருத்துவக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் போர்கால அடிப்படையில் செயல்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வருவாய் துறை அதிகாரிகளும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரின் ஒரு பகுதியில் உள்ள 10க்குx10க்கு அளவிலான கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. முறையான உரிமம் பெற்று இந்த பார் நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
