Police Department News

எப்போது பார்த்தாலும் அக்கா வீட்டுக்கார் புராணம் பாடிய மனைவி?.. கணவன் தற்கொலை.. மாமியார் புகார்

எப்போது பார்த்தாலும் அக்கா வீட்டுக்கார் புராணம் பாடிய மனைவி?.. கணவன் தற்கொலை.. மாமியார் புகார்

சென்னை: கும்மிடிப்பூண்டியில் தனது மனைவி எப்போது பார்த்தாலும் அவருடைய அக்காள் கணவர் பற்றியே பெருமை பேசுவதால் விரக்தி அடைந்த கணவர் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமான 7 மாதங்களிலேயே அந்த பெண்ணின் உறவினரை வைத்து பிரச்சினை ஏற்பட்டதால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கரும்புகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (32). இவருக்கு சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இல்லற வாழ்க்கை ஆரம்பத்தில் சுமூகமாக போனது. நாளடைவில் அந்த பெண், தினமும் தினேஷிடம் எங்காவது வெளியே அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். மேலும் நமக்கு இப்போதுதானே திருமணம் நடந்தது, வெளியே சென்று ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும்தானே இருக்கும் என அந்த பெண், தனது கணவரிடம் கேட்டாராம்.

ஆனால் தினேஷோ, “நான் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருவதற்கே இரவு நேரம் ஆகிவிடுகிறது. அதற்கு பிறகு எங்கே செல்வது, கோயிலுக்கு செல்வதென்றால் 8 மணிக்கெல்லாம் நடை சாத்திவிடுவார்கள், சினிமா தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்றால் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்ய வேண்டும்.

அப்படியே இருந்தாலும் நான் வரும் நேரத்திற்கு நைட் ஷோ தான் போக முடியும். இரவு கண் முழித்துவிட்டு மீண்டும் காலையில் வேலைக்கு செல்வது எப்படி?” என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் சொன்ன பதிலை கேட்டு அதிர்ந்தாராம் தினேஷ்.

நான் என் வீட்டில் இருந்த போது என் அக்கா கணவர் ராஜா, என்னை வெளியே அழைத்து சென்று எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பார். நீங்கள் எப்ப கேட்டாலும் நேரம் இல்லை என்கிறீர்களே” என மனைவி சொல்லியுள்ளார். இந்த விஷயத்திற்காக என்றில்லை எல்லா விஷயத்திலும் ஆ ஊன்னா அக்கா கணவர் பற்றியே அந்த பெண் பேசியதாக தெரிகிறது.

இதனால் இருவருக்குள் அடிக்கடி சண்டை வந்தது. உடனே அந்த பெண் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். பின்னர் பெற்றோர் சமாதானப்படுத்தி அந்த பெண்ணை புகுந்த வீட்டில் கொண்டு போய்விட்டனர். அப்போது மீண்டும் தனது அக்கா கணவர் புராணத்தை அந்த பெண் பாடியதால் தினேஷ் மீண்டும் சண்டையிட்டுள்ளார்.

இதனால் மீண்டும் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார் அந்த பெண்! பிறகு தினேஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோ இதுதான்: “நான் உங்களிடம் பேசும் கடைசி வார்த்தை இதுதான்! என் குரலை கடைசியாக கேட்க போவதும் இதுதான்! என் சாவுக்கு காரணம் என் மனைவியும் அவருடைய மாமா ராஜாவும்தான்! வேறு யாரும் கிடையாது.

இனி அந்த பெண் முகத்தில் நான் முழிக்கவே கூடாது என்பதற்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே என் சாவுக்கு அந்த பெண் வரவேக் கூடாது. அம்மா கடைசியாக எனக்காக இதை செய்யுங்கள். அந்த பெண்ணை வரவிடாதீர்கள்” இவ்வாறு அந்த வீடியோவில் தினேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் தினேஷின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவருடைய உறவினர்கள் கும்மிடிப்பூண்டி போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து தினேஷின் தாய் திலக ராணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “எனது மகனை, மருமகள் தினமும் டார்ச்சர் செய்தார். “இரவானால் அவருடைய மாமா கதையை பேசுகிறார். எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என என் மகன் நிறைய முறை கவலைப்பட்டுள்ளார். இதனால் என் மருமகளை நானும் கண்டித்துள்ளேன். அந்த பொண்ணால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ராஜா, என் மகனிடம் வந்து “என் மைத்துனியை எங்கள் வீட்டுக்கே அனுப்பி வைத்துவிடு” என கூறியதால் என் மகன் மனம் உடைந்துவிட்டார்” என தாயார் கண்ணீருடன் தெரிவித்தார்.

ஆனால் இந்த தற்கொலை குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், மனைவி கர்ப்பமாக இருந்துள்ளதாகவும், தினேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதை மனைவி தட்டி கேட்டதாகவும், இதற்காகவே தினேஷ் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகிறார்கள். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.