வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி டிரைவருடன் அதிரடியாக கைது..
சென்னையை அடுத்த வண்டலூரில் திமுக ஒன்றிய செயலாளர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 56 வயதாகும் வி.எஸ்.ஆராவமுதன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு துணை தலைவராகவும் பதவியில் இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 29-ந்தேதி இரவு வண்டலூர் பெருமாள் கோவில் எதிரே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியதுடன், ஆராவமுதனை வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கில் கடந்த 1-ந்தேதி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் சரணடைந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 4-ந்தேதி மேலும் 4 பேர் சரணடைந்தனர்.
சரணடைந்த சிறுவனை தவிர மற்ற 8 பேரையும் ஓட்டேரி போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் மீண்டும் 8 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19), வண்டலூர் ஸ்டாலின் தெருவை சேர்ந்த முகிலன் (21), வாணியம்பாடி பகுதியை சேர்ந்த தீபக்ஸ்ரீ ராம் (21) வண்டலூர் அருகே உள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த சேதுராமன் (21), ஆகிய 4 பேரை ஓட்டேரி போலீசார் கைது செய்தார்கள்.
வண்டலூரைச் சேர்ந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆராவமுதன் கொலை வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க மகளிர் அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வரும் முத்தமிழ் செல்வி விஜயராஜ் (50), மற்றும் அவரது கார் டிரைவர் துரைராஜ் (37), ஆகிய இருவரையும் ஓட்டேரி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி, அவரது கார் டிரைவர் ஆகிய இருவரையும் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி விஜயராஜ், திமுக நிர்வாகி ஆராவமுதனை கூலிப்படை ஏவி கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராக ஆராவமுதன் இருமுறை பதவி விகித்துள்ளார். இறுதியாக தி.மு.க.வில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக தற்போது இருந்து வந்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவியாக முத்தமிழ் செல்வி கடந்தமுறை வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லையாம். கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஆராவமுதனுக்கு அனைத்து மரியாதைகளும் கிடைத்ததாம். இந்த காழ்புணர்ச்சியால் ஆராவமுதனை கொலை செய்ய தனது கார் டிரைவர் துரைராஜ் மூலமாக ரவுடி கனகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு ரூ.20 லட்சம் பணம் தருவதாக கூறி அவர்களை வைத்து கொன்றாராம். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.